Monday 4 November 2019

அமைச்சருடன் சந்திப்பு...

04/11/2019 அன்று டெல்லியில் இலாக்கா அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் அனைத்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. சங்கத்திற்கு இருவர் வீதம் அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். NFTE சார்பில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும், தோழர்.ராஜ்மெளலி அவர்களும் கலந்து கொண்டனர். DOT செயலர், BSNL மனிதவள இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கூறியவை....

இந்திய தேசத்தில் இதுவரை எந்தவொரு பொதுத்துறைக்கும் 
இல்லாத அளவிற்கு BSNL நிறுவனத்திற்கு புத்தாக்கத் திட்டம் 
அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பில் அரசுத்துறையின் பங்கு இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைபாட்டின் அடிப்படையில் பிரதமர் மற்றும்
உள்துறை அமைச்சர் ஆகியோரின் விருப்பத்துடன் புத்தாக்கத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

புத்தாக்கத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விரைவிலேயே BSNL லாபம் ஈட்டும் பொதுத்துறையாக மீண்டும் மீண்டுவரும் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு.

BSNL விரைவிலேயே தனது அசையாச்சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கிட்டும் பணம் முழுக்க முழுக்க BSNL வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

புத்தாக்கத்திட்டத்தின் முக்கிய அம்சமாக ஊழியர்களுக்கு 
விருப்ப ஓய்வுத்திட்டம் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை எந்தவொரு துறையிலும் இவ்வளவு பலன்தரக்கூடிய திட்டம் ஊழியர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

புத்தாக்கத்திட்டத்தின் வெற்றி விருப்ப ஓய்வுத்திட்டத்தை 
முழுமையாக அமுல்படுத்துவதில்தான் அடங்கியுள்ளது.

களத்தில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டம் முழுமையாக விளக்கப்பட வேண்டும். ஊழியர் மனங்களில் உள்ள சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படவேண்டும்.

புத்தாக்கத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்கங்கள் எழுப்பிய கோரிக்கை...

விருப்ப ஓய்வு என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது. ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 58ஆகக் குறைக்கப்படும் என்ற
சந்தேகத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

விருப்ப ஓய்வுக்காக கொடுக்கப்படும் பணப்பலன் மீது வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

இதுவரை BSNL அளித்து வரும் கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பை
DOT திருப்பி அளிக்க வேண்டும்.

நாடுமுழுக்க 4G உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதால் BSNLக்கு உடனடியாக 4G அலைக்கற்றை வசதியை வழங்க வேண்டும்.

BSNL குடியிருப்பில் உள்ள ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றாலும் தொடர்ந்து குடியிருப்பில் வசிக்க அனுமதிக்க வேண்டும்.

01/01/2017 அன்று 119.5 சத IDAவை அடிப்படைச்சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.

3வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும்.

சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட பின் ஊழியர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும் புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத்திட்டம் எவ்வாறு வெற்றிகரமாக அமுலாக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதை அமைச்சர் சந்திப்பில் இருந்து 
நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தோழர்கள்... இனி தங்களுக்கான விருப்ப ஓய்வு பணப்பலன் கணக்குகளைக் கணக்கிடுவதில் காலத்தைச் செலவிடலாம்.